Friday 2 April 2010

சிறுவர் நாடக அரங்கும் சிறுவர்களின் ஆளுமை வளர்ச்சியும்

ஒரு அனுபவக் குறிப்பு  
  தே.தேவானந்த்
‘அரங்கு’ என்பது பல்வேறு பரிமாணங்களைத் தன்னகத்தே கொண்ட, தாக்கவன்மை கூடிய ஓர் தொடர்வு கொள்சாதனம், இந்த வகையிலே சிறுவர்களின் ஆளுமையை விருத்தி செய்வதற்குச் சிறுவர் அரங்கை ஓர் ஊடகமாக ஈடுபடுத்த முனைகின்ற முயற்சியின் அனுபவ வெளிப்பாடாக இக்கட்டுரை அமைகிறது. எமது தேசத்தில் சிறுவர் அரங்கின் தோற்றமும், அதன் வளர்ச்சியும் என்ற பகைப் புலத்தினடியாகவே எனது அனுபவத்தை வெளிப்படுத்த முனைகிறேன். 1978ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களின் முயற்சியினால் நிறுவப்பட்ட நாடக அரங்கக் கல்லூரி புதிய நாடகப் பாதையைத் திறந்துவிட்டது. இதன் வழியில் வேறுபட்ட நாடக முறைமைகள் வளர்ச்சி அடைந்தன. ‘சிறுவர் அரங்கு’ என்பது இம்முறைமைகளில் முக்கியம் பெற்றது.



பொழுதுபோக்கு என்பதனைப் பிரதான அம்சமாகக்கொண்டிருந்த நாடக அரங்கக் கலையானது, எண்பதுகளுக்குப் பிற்பட்ட காலப்பகுதியில் பிரச்சினைகளை மையப்படுத்தியதாகவும், விழிப்புணர்ச்சியைத் தூண்டுவதாகவும் கல்விக் குரியதாகவும் மாற்றமடைந்தது. அரங்கு என்பது ஓர் உயர்நிலைக் கற்கை நெறியாக அங்கீகரிக்கப்பட்டது.



இந்த நிலையில் தான் சிறுவர்களின் கல்வியை மையப்படுத்தி அவர்களின் ஆளுமையை விருத்தி செய்யும் நோக்கில் சிறுவர் நாடகம் உயிர்ப்புப் பெறுகிறது. திரு.குழந்தை ம.சண்முகலிங்கம் எழுதி, திரு.தாஸிஸியஸ் நெறியாள்கை செய்து “கூடிவிளையாடு பாப்பா” என்ற சிறுவர் நாடகம் இத்தகையதொரு முயற்சியின் முன்னோடி என்று சொல்லலாம். இந்த நாடகம் சிறுவர்களுக்காகப் பெரியவர்களால் நடிக்கப்பட்டதாகும். சிறுவர்களுக்கு உள்ளக் கிளர்ச்சி, ஆனந்தம், வியப்பு என்பவற்றை ஏற்படுத்தும் வகையில் மிருகங்கள் பாத்திரங்களாக்கப்பட்டன. சிறுவர்களின் இயல்புக்கேற்ற ஆடலும், பாடலும், விளையாட்டும் வினோதமும் நிறைந்ததாக இந் நாடகம் தயாரிக்கப்பட்டது. இவ் ஆரம்ப முயற்சியோடு ‘சிறுவர் அரங்கு’ என்பது ஒரு முக்கிய அரங்கச் செயற்பாடாக மேற்கிளம்பிற்று எனலாம்.



இதன் வளர்ச்சிப்படியில் நாடக அரங்கக் கல்லூரி பயில்நிலை மாணவனாக இருப்பதன் பயனாக, சிறுவர் நாடகங்களைப் பார்த்து, நடித்து நெறியாள்கை செய்து பெற்ற அனுபவங்களினூடாக சிறுவர் அரங்கு, சிறுவர்களிடம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்திற்று அல்லது ஏற்படு;தி வருகிறது என்பதை இங்கு ஆராய முற்படுகிறேன்.



சிறுவர் நாடகம் அதாவது சிறுவர்களுக்காகவும் பெரியவர்களுக்காகவும் சிறுவர்கள் நடிக்கின்ற நாடகம், யாழ்ப்பாணத்தின் பெரிய வசதி படைத்த பாடசாலைகளிலும், சிறிய வசதி குறைந்த பாடசாலைகளிலும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் வசதிபடைத்த பாடசாலை என்பது வெறுமனே கட்டிடங்களையும் தளபாடங்களையும் கொண்டதல்ல. இங்கு யாழ்ப்பாண சமூகத்தின் திறமை வாய்ந்த மாணவர்கள் வடிகட்டி எடுக்கப்படுகிறார்கள். இங்கு கல்வி கற்கின்ற மாணவர்கள் உடல், உள, சமூகப் பின்னணியில் மிகவும் உயர்ந்து காணப்படுகின்றனர். அதே வேளை சிறிய பாடசாலையின் நிலைமை மிகவும் மோசமானது. இங்கு கல்வி கற்கின்ற மாணவர்கள் உடல், உள, சமூகப்பின்னணியில் மிகவும் பின்தங்கிய அல்லது பாதிக்கப்பட்டவர்களாகக் காணப்படுகின்றனர். எமக்கு இவ்விரு வகையான மாணவர்களுடனும் பழகுகின்ற, அவர்களுடன் நாடகம் தயாரிக்கின்ற பாக்கியம் கிடைத்தது. இதில் நாம் அவதாணித்தவைகளாகப் பின்வருவனவற்றைக் கொள்ளலாம்.



வசதி படைத்த பாடசாலை:

1. மாணவர்களில் பலர், சங்கீதம், மிருதங்கம், நடனம் பயின்றுகொண்டுடிருப்பவர்கள், தெரிந்திருப்பவர்கள் எனக் காணப்படுவர்.

2. இவர்கள் உள்ள ஆரோக்கியம் காரணமாக சந்தோஷமாகக் காணப்படுவார்கள். பாடசாலையின் எல்லா நடவடிக்கைகளிலும் பங்கு கொள்வார்கள்.

3. நாடகத் தயாரிப்பில், தேவையான உடைகள், காட்சிப் பொருள்கள், வாத்தியக் கருவிகள், பொருத்தமான மேடை என்பன காணப்படும்.



வசதி குறைந்த பாடசாலை

1. பாடுவதற்கோ, ஆடுவதற்கோ எத்தனிக்காத பல மாணவர்கள் காணப்படுவர்.

2. உள ஆரோக்கியம் குறைவான பலர்காணப்படுவர்.

(போசாக்கின்மைஃகுடும்பத் தகராறு)

இவர்களின் முகங்கள் இறுகி இருக்கும்.

3. நாடகத் தயாரிப்பின் போது உடைகள், காட்சிப் பொருள்கள், பொருத்தமான மேடை என்பன காணப்படமாட்டாது.



இவற்றைக் கருத்தில் கொண்டு நாடகம் இணக்கப்படும்.



ஒரு சிறுவர் நாடகத்தைத் தயாரிப்பதற்கு முன், சிறுவர்களை தளர்வான நிலைக்கு (ஐஉந டீசநயம) கொண்டு வருவதற்காக அவர்களுடன் நாம் கலந்து விடுவோம் - விளையாட்டும் ஆடலும் பாடலும் இறுகிய முகங்களை மலரச் செய்யும். இந்த நடவடிக்கையே நாடகத்தில் நீண்ட பகுதி. இது நிகழ்ந்தபின் நாடகம் இணக்கப்படுதல் மிகவும் சுலபம். சிறுவர்களை, சிறித தட்டிவிட்டால் அவர்கள் பாய்வார்கள். அவர்களின் பாய்ச்சல் எமக்கு வியப்பைத் தரும்.



இவ்வாறு ஓர் தளர்நிலைக்கு வந்தபின் சிறுவர்கள் எப்ப நாடகத்தைத் தொடங்குவீர்கள் எனக் கேட்டு “நாடகத்தைப் பழக்குங்கோ” என வலியுறுத்துவார்கள். இவ்வாறான நிலையில் மாணவர்களுக்கு எழுத்துருவைக் கொடுத்து அவர்களின் இயல்புக்கு ஏற்ப பாத்திரத் தெரிவை மேற்கொண்டு ஒவ்வொரு காட்சியாகச் சிரமமின்றிச் செய்ய முடிகிறது.



வசதி படைத்த பாடசாலைகளைப் பொறுத்தவரை

1. சிறுவர்களிடம் காணப்பட்ட ஆற்றல்களை சிறுவர் நாடகத்திற்கு தேவையான வகையில் வழிப்படுத்துவதே எங்கள் முக்கியமான பணியாக இருந்தது.

2. நாடகத் தயாரிப்பு படிப்படியாக வளர்ந்து கொண்டிருந்த வேளைகளில் மாணவர்களின் திறமை, வெளிப்பாட்டு வேகம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கவில்லை. ஆரம்பத்தில் வெளிப்படுத்தப்பட்ட ஆற்றலே அவர்களின் உயர்புள்ளி.

3. நாடகம் அவர்களுக்கு பெரியளவிலான தாக்கத்தைக் கொடுக்கவில்லை போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.



இத்தகைய அனுபவங்கள் ஏற்பட்டிருந்த வேளையில், கிராமப்புற சிறிய பாடசாலை ஒன்றின் பரிசளிப்பு விழாவுக்காக சிறுவர் நாடகம் ஒன்றைத் தயாரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டபோது, சிறுவர் நாடகம் தொடர்பான பல அனுபவங்கள் ஏற்பட்டன. ஆரம்பத்தில் பாடசாலைக்குச் சென்றபோது திறமை மறைந்த மாணவர்களையும், ஆர்வமற்றவர்களையுமே எதிர்பார்த்தோம். ஏதோ கேட்டதற்காகச் செய்வோம் என்ற மனநிலையே எமக்கிருந்தது. ஆனால், நாங்கள் அங்கு பெற்ற அனுபவங்கள் எமது எதிர்பார்ப்பிற்கு மாறாகப் புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தந்தன.



அப்பாடசாலைக்காக “ஒற்றுமையின் சின்னம்” என்ற சிறுவர் நாடகத்தைத் தயாரித்தோம்.



1. பாத்திரத் தெரிவு

2. உரையாடல்களை மனனம் செய்தல்

3. சிறுவர்களுக்கான ஆடல்கள் பாடல்கள்

4. சிறுவர்களுக்கான உடைகள்.

போன்றவை தொடர்பாக நாங்களே புதிய உத்திகளையும் முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டியிருந்தது. ஆரம்பத்தில் வெட்கப்பட்டு பயத்தால் ஒதுங்கி ஒதுங்கி இருந்த மாணவர்கள் ஓரிரு நாட்களில் ஆர்வத்துடன் விளையாட்டுக்களிலும் ஆடல் பாடல்;களிலும் உற்சாகமாக ஈடுபட்டனர். அவர்களாகவே புதிதாகப் பலவற்றைச் செய்தனர். பழைய தகரப் பேணியும் சிரட்டையும் வாத்தியக் கருவிகளாயின, எமக்கு நம்பிக்கையும் உற்சாகமும் ஏற்பட்டது.



இவர்களிடம் நாம் துல்லியமாக அவதானிக்கக் கூடியனவாக பின்வரும் மாற்றங்கள் நடந்தன.



1. ஆண்-பெண் என்ற வேறுபாட்டுடன் வேறு வேறாக இருந்தவர் சேர்ந்து விளையாடுவதும் ஆடுவதும் பாடுவதும் அடிபடுவதும் இரண்டறக் கலந்தனர்.

2. தாளப்பிடிப்பு இல்லாது வெறுமனே துள்ளிக் குதித்தும் தாளமின்றிக் கைதட்டியும் நின்றவர்கள் நல்ல தாள பிடிப்புள்ளவர்களாகவும் நாம் கற்பித்த சில பரத நாட்டிய ஆட்டங்களை இலகுவாகப் பிடிக்கக் கூடியவர்களாகவும் மாறினர்.

3. மற்றவர்களுடன் கதைக்காது வகுப்பறைகளில் பதுங்கியிருந்தவர்கள் கூச்சமின்றிக் கதைக்கவும் ஏயைவர்களுடன் இலகுவிற் சேரவும் குறிப்பாக, புதியவர்கள் வந்தால் அவர்களை கட்டியணைத்து கதைக்கவும் செய்தார்கள்.

4. இந்த நாடகத்தில் ஈடுபட்ட மாணவர்களில் பலர் வகுப்பறைக் கற்பித்தலில் அக்கறை காட்டுவதோடு ஒருமைப்பாட்டுடன் கூர்ந்து கவனிக்கவும் செய்கிறார்கள். இவர்களின் கற்கையில் வளர்ச்சியும் காணப்படுகிறது. என பாடசாலை அதிபர் குறிப்பிட்டார்.



மொத்தத்தில் சோர்வோடும் பயத்தோடும் காணப்பட்ட மாணவர்கள் சிறுவர் நாடகச் செயல் முறையின் காரணமாகத் துடிப்புடன் காணப்பட்டன. “இப்ப பெடியளை வகுப்பறையில் அடக்க முடிவதில்லை. ஒவ்வொன்றிற்கு கேள்வி கேட்கிறார்கள். உற்சாகமாக இருக்கிறார்கள்” என பாடசாலை அதிபர் குறிப்பிட்டார்.



சிறிய வசதி குறைந்த பாடசாலைகளிலும் மிகத் திறமை வாய்ந்த மாணவச் சிறுவர்கள் இருக்கிறார்கள் என்பது நாடகச் செய்முறையின் மூலம் நிரூபணமாகியுள்ளது. வசதியான பாடசாலைச் சிறுவர்களின் உச்சப்புள்ளி வசதியற்ற பாடசாலைச் சிறுவர்களின் உச்சப்புள்ளியை விடக் குறைவாக இருந்ததை தெளிவாகப் பார்க்க முடிந்தது. படிப்படியான வளர்ச்சி மூலம் மிகக் கூடிய உச்சத்துக்கு செல்கின்றது.



இந்த நாடகத்தை அயலில் உள்;ள பாடசாலைகளில் மேடையேற்றினோம். அங்கு வௌ;வேறு விதமான மேடை இருந்தது. அத்தகைய மேடையில் எல்லாம் எவ்விதமான தயக்கமும் இன்றி இச் சிறுவர்கள் நடித்தார்கள்.



எமக்கு இவ்வாறாக கிராமப்புறச் சிறிய பாடசாலைகள், கற்கைத்தளமாகவும், சிறுவர்களுக்கு

ஆளுமை விருத்திக் களமாகவும் திகழ்ந்தன.



சிறுவர் நாடக செயன்முறை நிகழ்ச்சிப் போக்கில் சற்று வித்தியாசமானதொரு களம், பேராசிரியர்

அ.சண்முகதாஸ் தலைமையில் இயங்குகின்ற “சிறுவர் நிறைவாழ்வு” இல்லத்தில் கிடைத்தது. இங்கு ஏழைச் சிறார்களும் ஆதரவற்ற சிறார்களும் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட சிறார்களும் வாழ்கிறார்கள். இக்களம் சிறுவர் அரங்கு சிறுவர்களின் ஆளுமை விருத்திக்கானது என்ற நடைமுறையை எமக்குத் தந்தது.



அங்கு சிறுவர் நாடகத்ததை தயாரிக்குமாறு அதன் பொறுப்பாளர் பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்கள் கோரினார்கள். அங்கிருந்து ஆண்பிள்ளைகளை வைத்துக் கொண்டு விடுமுறை நாட்களில் நாடகத்தை தாயாரிக்க வேண்டியிருந்தது. இங்கு பலருக்கு எழுத வாசிக்கத் தெரிந்திருக்கவில்லை, எல்லோரது முகங்களும் இறுகிப் போயிருந்தன. அவர்களுடன் உரையாடினோம். சிலர் கதைத்தார்கள் சிலர் வாய் திறக்க மறுத்தார்கள். ஆனால் நாம் பாடல்கள் சிலவற்றை சொல்லிக் கொடுத்தபோது சீரான ஒழுங்கில் எல்லோரும் பாடினார்கள். தினம் காலை, மாலை பஜனை செய்வது காரணமாக அவர்களால் பாடமுடிந்தது. பாடிப்பாடி அசையுமாறு சொன்னபோது அசைய மறுத்தார்கள். இது எமக்கு ஒரு பிரச்சினையாக இருந்தது. இதனை எதிர் கொண்டு வரும் மாணவர்களைக் கொண்ட நாடகத்தை தயாரிக்க வேண்டியிருந்தது.



இரண்டு வாரங்களுக்கு விளையாட்டை முதன்மைப்படுத்தி ஆடல் பாடல்களைப் பயிற்றுவித்த போது அவர்களில் படிப்படியான முன்னேற்றத்தைக் காணமுடிந்தது. விளையாடுகிறபோது பல சாகசங்களைச் செய்பவர்களை இனங்கண்டோம். இவற்றின் பின்னர்தான் நாடகப் பிரதியை அவர்களிடம் கொடுத்தோம். அதை மனனம் செய்ய சிரமப்பட்டார்கள். ஒவ்வொரு காட்சியாகச் செம்மைப்படுத்தினோம். அவர்களால் செய்ய முடிந்த இலகுவான ஆடல்களை அமைத்து தூண்டி விட்டோம். ஆரம்பத்தில் வசனம் பேச சிரமப்பட்டவன் பின் சிறந்த முறையில் பேசி நடிப்பவனாக இருந்தான்.



சிறுவர் நிறைவாழ்வு இல்லத்தைப் பராமரிக்கின்ற திருவாட்டி மணோன்மணி சண்முகதாஸ் அவர்கள் குறிப்பிடும் போது “சிறுவர் நாடகத்தில் நடித்தவர்கள் எல்லோரும் தமக்குள் ஒற்றுமையாகவும் விட்டுக் கொடுக்கின்ற மனப்பாங்கு உள்ளவர்களாகவும் காணப்பட்டார்கள். இப்போது எல்லாவற்றிற்கும் உற்சாகத்துடன் முன்னிற்கின்றார்கள். துடிப்பாக சற்தோஷமாக பாடல்களைப் பாடித்திரிகிறார்கள்” என்று சொன்னார்.



திரு.குழந்தை ம சண்முகலிங்கம் அவர்களின் “நட்பு” என்கிற நாடகமும் இவர்களுக்காகத் தயாரிக்கப்பட்டது. இதனை ஒரு தடவை, மேடையேற்த்துக்காகத் தயார்படுத்திக் கொடுத்த பின்னர் எமக்கு அங்கு வேலை இல்லை. வேறிடங்களில் மேடையேற்றப்படும்போது அவர்களாகவே ஒத்திகை பார்த்து தேவையான ஆயத்தங்களைச் செய்வார்கள்.



பங்கு பற்றும் ஒருவருக்கு, சில சமயம் சுகயீனம் ஏற்பட்டால் தாமாகவே ஒருவரைத் தெரிவு செய்து ஒத்திகை பார்ப்பார்கள். எத்தகைய மேடையென்றாலும், மேடை இல்லாது விட்டாலும் எத்தகைய பார்வையாளர்கள் இருந்தாலும் பயமின்றி உற்சாகமாக நாடகத்தை ஒரு விளையாட்டாகச் செய்கின்றபோது, “தம்மால் எதுவும் முடியும் என்ற மன உறுதி” அவர்களிடம் வந்துள்ளது என்பதை அறிய முடியும்.



சிறுவர் நாடகம் என்பது விளையாட்டையும், கணிப்பையும், ஆடலையம், பாடலையும், வினோதத்தையும் கொண்டது. என்பதை அடிப்படையாகக் கொண்டு மிருகங்கள், மரங்கள், உரைஓர் என்ற அமைப்பு முறையை கொண்ட அமைப்பாக எண்பதுகளின் முற்பகுதியில் இருந்து தொண்ணூறுகளின் முற்பகுதியில் வரை இருந்து வந்த சிறுவர் அரங்கு. இன்று மிகக் காத்திரமான உணர்ச்சியைக் கொடுக்கின்ற பிரச்சினையை முக்கிய பொருளாகக் கொண்ட அரங்காகவும் காணப்படுகின்றது. மரங்களைத் தறிப்பதால் வறட்சி ஏற்படுகிறது. வறட்சியால் பசி, பட்டினி, இதனை நீக்க “நண்பர்களே மரம் நடுவோம்” என சிறுவர்கள் முழங்குகின்ற “பாலுக்குப் பாலகன்” என்னும் நாடகம் உணர்ச்சியுடன் தற்போதைய எமது முக்கிய பிரச்சினையை விளக்கி பார்வையாளர் கைகளிலே மரக்கன்றுகளைத் தருகின்றது. இந் நாடகமும் ‘சிறுவர் நிறை வாழ்வு இல்ல’சிறார்களால் நடிக்கப்பட்டது.



சிறுவர்கள் நாட்டில் முக்கியமானவர்கள், கவனிக்கப்பட வேண்டியவர்கள். இவர்களின் உடல், உள ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. இவர்களின் மகிழ்ச்சி நாட்டின் மகிழ்ச்சி இந்த மகிழ்ச்சியை சிறுவர் அரங்கு ஏற்படுத்தும் என்பதை விளக்கிக் கொண்டு சிறுவர் அரங்கை மேலும் ஊக்கப்படுத்தி, சிறுவர்களின் ஆளுமை வளர்க்க வேண்டும்.



எனது அரங்குசார் செயற்பாட்டின், அனுபவத்தின் அடிப்படையிலே இத்தகைய முயற்சி சாத்தியமானது என்பதை உணர முடிகிறது.

No comments:

Post a Comment